Download writer balakumaran novels:kanavugal virpavan


"எழுத்துச் சித்தர், ஞானி, மஹான் பாலகுமாரன்” அவர்களால் 1990-ம் வருடம் எழுதி வெளிடப்பட்ட "கனவுகள் விற்பவன்" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை. ( பக்கம் 178 – 184 )
சாக்தன் என்பவன் சிவம். அவன் வழிபாடு சக்தி. பார்த்தசாரதியை சக்தி வழிபாடு செய்யச் சொல்ல வேண்டும். எப்படி... என்ன விதம்... அதுதான் ஊரில் ஒரு கோயில் இருக்கிறதே . பார்த்தசாரதி எதற்கு இன்னொரு ஆள். ஏன் இன்னொரு கோயில்.
என்ன புதிய முறை... சாக்த வழிபாடு எப்படிச் செய்வது.? இங்கே... சாக்த வழிபாடு எப்படிச் செய்ய வேண்டும். பெண்ணை வழிபடுதல் என்றால், பெண் மாதிரி ஒரு உருவம் வைத்து வழிபடுதலா...
இல்லை. பெண்ணையே வழிபடுதல்... பெண்களை வழிபடுதல். பெண்ணைச் சிலையாக்காமல் எல்லாப் பெண்களையும் மதித்தல். பெண்ணை அவள் சகல ரூபங்களோடும் ஏற்றுக்கொள்ளுதல்.
அவளின் கோபதாபத்தோடு புரிந்து கொள்ளுதல். அவள் உடற்கூற்றை ஏற்றுக் கொள்ளுதல். அவள் பலம் பலவீனம் பிரிவு காட்டாது இரண்டுமே சரியென்று தன்னுள் மதித்தல்.
வெறும் ரத்தப் பெருக்கு என்று தாழ்ச்சி காட்டாது இது இயற்கையின் லீலை என்று உயர்த்தி வைத்தல். சித்து விளையாட்டு என்று ஞானம் கொள்ளுதல்.
வயிறும், யோனியும், முலைகளும் ஞானம் தரும் உபாயம் என்று போற்றுதல். உன் விருப்பம் என்ன... உன் ஆசை எது.. உன்னைப் போற்றுதல் எப்படி என்று அவளிடமே யாசித்தல்.
அவளுக்கு கீழ்ப்படிந்து நடத்தல். 'நீ ஆளுமை செய்' என்று அவளிடம் தன்னை ஒப்புவித்தல். 'எனக்கு உண்டானவள் நீ 'யென்று சொல்லாது உனக்கு உண்டானவன் நானென்று ஏற்றல். 'என்னை இயக்கு' என்று கட்டளைக்குக் காத்திருத்தல்.
இது சரியா... நான் யோசிப்பது சரியா.. இது நல்ல முறையா.. ஏன் சாக்தம் இல்லை இப்போது. ஏன் அழிந்து போயிற்று இந்த முறை.
கிடா வெட்டலும், தீ மிதித்தலும், அழகு குத்தி நிற்றலும், என சக்தி வழிபாடு ஆண் ஆட்டமாய் போயிற்று. பெண்ணுக்கு அங்கே என்ன உயர்வு? பெண்ணை ஏன் மறந்து போய், ஆண் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டான்.
சக்தி வழிபாட்டில் பெண்ணல்லவோ முக்கியம். பெண் அல்லவோ மூத்தவள், உடல் வளர்ச்சியில், மன முதிர்ச்சியில் பெண்ணல்லவோ மூத்தவள்.
நான் யோசிப்பது சரியா? ஏன் சாக்த வழிபாடு காணாது போயிற்று? ஆண் வழிபட வெட்கப்பட்டு விட்டானா... இல்லை பெண் அந்நியமாகிவிட்டாளா? இந்த பூமி பெண்ணை வழிபட்ட பூமிதானே... காமகோட்டம் என்று பெண்ணுக்குத் தனியே வழிபாடு நடத்திய ஊர்தானே.
இந்த பூமியில் யுத்தம் வந்து அந்நியர் உள்ளே நுழைந்து போரில் ஆண்கள் சாக, பெண்கள் அதிகமாகி, யுத்த பூமியில் அந்நியர் ஆளுமையில் பெண் அடக்கப்பட, அவளைக் கவர்ந்து சென்றுவிட,
அது அவமானமாகி நீ இருப்பின் எவனாவது கடத்த வருவான், நீ இல்லாது போ என்று விரட்டப்பட்டு, கொல்லப்பட்டு, சுடுகாட்டு சாம்பலே தன்னை மறந்து சிவனே பெரிதாயிற்றா?
சரணடைந்த தத்துவமே பெரியதாயிற்றா? எது நடந்தாலும் 'அவன் செயல்' என்று சும்மா இருத்தலில் பெண் மதிப்பற்று போனாளா. இயக்கமே குறைந்து, இது விதி, என் தலையெழுத்து, மன்றாடு... அவன் உன்னை மீட்பான் என்கிற தத்துவம் வளர்ந்துவிட்டதா?
அந்நியனிடம் சரணடைந்து, கடவுளிடம் சரணடைவது எளிதான விஷயமாய் போயிற்றா? நான் தவறோ.. யோசிப்பது தவறோ... சாக்தம் குறைந்ததற்குக் காரணம் அந்நிய மதத்தினர் ஆட்சியே.
இன்று மறுபடி சாக்தம் செய்தால் என்ன? சக்தி வழிபாடு நடத்தினால் என்ன? பெண்ணை மீண்டும் முதலாய் நிறுத்தினால் என்ன? பூசித்தால் என்ன? உன்னால் உன்னுள் உன்னோடு என்று மதித்தால் என்ன?
கிடாய் வெட்டுவது பூஜையில்லை. போர் வெறி. தீ மிதித்தல் வழிபாடு இல்லை. தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தண்டனை. அலகுக் குத்தல் சரியில்லை.. தன் வேதனையில் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் ஆசை.
பெண்ணைப் பூஜித்து, பெண்ணைக் கௌரவப்படுத்தி, பெண்ணால் பெரியவனாகி, பெண்ணை அங்கீகரித்து, பெண்ணோடு பிணைந்து வாழ்தலை மறுபடி செய்தால் என்ன?
சாக்தம் அதுதானே... என்னுள் பாதி பெண்தானே? என் இயக்கம் நீ என்பதுதானே. என்னைத் தூண்டி விடு என்று சொல்வதுதானே. எனக்குத் துணை நில் என்பதுதானே?
மறுபடி சாக்தம் வருமா? வரவழைக்க முடியுமா? பெண்ணை இந்த சமூகம் மதிக்கும் வண்ணம் ஒரு அமைப்பு நடத்த இயலுமா? பார்த்தசாரதிக்கு இது புரியுமா? புரிந்தாலும் பொறுமையாய் செய்ய இயலுமா?
பார்த்தசாரதி இருக்கட்டும். என்னால் இயலுமா? நான் தெரியாமல் யோசிக்கிறேனா? அம்மா, எனக்குத் தெளிவு வருகிறதா? என் நினைவுகள் சரியா?
சரி... இப்படி ஒரு வழிபாட்டைப் பெண் ஏற்றுக்கொள்வாளா? காலங்காலமாய் அடிமையாகிக் கிடந்த வம்சம், அது மேடையேறி விழுந்து வணங்கினால் வாங்கிக் கொள்ளுமா?
வணங்க என்னால் முடியும். வணக்கம் தாங்க அவளால் முடியுமா?
புரட்டிப் போடுகிறேனோ.. இயற்கைக்கு மாறாய் யோசிக்கிறேனோ... அவள் என்னுள் பாதிதானே. ஏன் உயர்த்துகிறேன்? என்னைவிட உயர்வு என்று ஏன் யோசிக்கிறேன். ஏன் அவளைப் பூஜை செய்ய நினைக்கிறேன்?
சமமாக்க தலைக்குமேல் உயர்த்தித் தூக்க வேண்டும். அது சேற்றிலிருக்கிறது. இழுத்துக் கரையேற்ற வேண்டும். அது அதல பாதாளத்தில் இருக்கிறது முதலில் மேலே தூக்க வேண்டும்.
எனக்குப் புரிகிறது.கொஞ்சம் உயர்த்தி நிறுத்தினால்தான் அது என் உயரத்திற்கு வரும். என் மீது நம்பிக்கை கொள்ளும். பீடம் போட்டு உட்கார வைத்தால்தான் எனக்குச் சமமாய் நடை போடத் துவங்கும்.
நான் சரியா? என் யோசிப்பு சரியா? உள்ளே முழு சூரியன் பாலு ஐயருக்கு தோன்றியது.
என்னால் முடியுமா? என்னால் முடிந்ததைத்தானே இன்னொருவருக்கு உபதேசிக்க முடியும்.
இது.. இந்தக் கல் என்ன பாடுபடுகிறது. என்னை நானே அவமானப்படுத்திக் கொள்ள வைக்கிறது. இது அவமானமா.. பெண்ணை வணங்குதல் ஆணுக்கு இழுக்கா. இந்தக் கல், இதை வணங்குகிறேன்...
இதைவிட நான் உசத்தி இல்லையா? கல்லை வணங்குகிறவன் பெண்ணை வணங்கக்கூடாதா? கல்லைப் பெண்ணாய் வணங்க முடிகிறது. பெண்ணை கல்லாய் பார்க்க முடியாதா?
பெண்ணை ஏன் போகமாய் நினைக்க வேண்டும். சரி, இது கல். பெண் கல். அதாவது சரஸ்வதி. சரி, இதை என் மனைவி சரஸ்வதி என்று நினைத்துக் கொள்கிறேன்.
சரஸ்வதி உனக்கு நமஸ்காரம் என்று கைகூப்ப முடியுமா? விழுந்து வணங்க முடியுமா? பார்க்கலாம்.
வணங்கு... மனைவியை விழுந்து வணங்கு... இந்தக் கல் என் மனைவி சரஸ்வதி. இது அம்மன் கோவில் கல்லெனில் சரஸ்வதி அம்மன் இல்லையா?... அம்மன் சாயல் இல்லையா?...
சாயல் என்ன. இதுவே சரஸ்வதி இல்லையா. வணங்கு. அம்மன் கோயில் கல்லை பெண் என்று வணங்கு. மகள் என்று வணங்கு. தாய் என்று சொல்லி தெருவில் போகிற பெண்ணை வணங்கு.
எது தடுக்கிறது உனக்கு? எழுந்திரு, வணங்கு.
அம்மா என்று ஒருமுறை, அருமை மனைவி என்று மறுமுறை, அன்பு மகள் என்று ஒரு முறை வணங்கு. ஊரில் உள்ள எல்லாப் பெண்களும் நீ என்று வணங்கு.
இல்லை. யோசிப்போம். இந்த இடம் விட்டு வேறு இடம் போய் யோசிப்போம். ஒரே இடத்தில் உட்கார ஒரே சிந்தனை வருகிறது. உள்ளே புரண்டு யோசிக்க மறுக்கிறது. அவிழ்த்துக் கட்டு. குலைத்துக் கட்டு. கலைத்துக் கட்டு.
எண்ணங்களை உற்றுப் பார்ப்பதே தியானம். எந்தத் தடையுமின்றி அதன் போக்கில் அதனை அறிவதே தியானம். ஏதோ ஒரு புள்ளியில் நில்லாது, ஒன்றையே யோசிக்காது புரட்டிப் புரட்டிப் போடு.
உட்கார்ந்து நடந்து எல்லா நிலையிலும் மாறி மாறி யோசனைகளைக் கவனி. எண்ணங்களை அதன் போக்கில் வளர விடு. தானாய் பிரிந்து கிளை விட்டு பூத்துக் குலுங்குவதைக் கவனி.
இலையும், பூவும், முள்ளும், கிளையும், காயும், கனியுமாய் வளர்வதைப் பார். மொத்த தாவரத்தையும் சுவீகரி. ஏதேனும் ஒன்றை மட்டும் உனக்குப் பிடித்தது என்று தொடாதே. எல்லாம் எடு. எல்லாம் தொடு.
எழுந்திரு பாலு. நடந்தபடி யோசி. புள்ளியிலிருந்து விலகு. எழுந்து நடக்க எல்லாம் மறந்து போயிற்று. யோசித்ததெல்லாம் காணாமல் போயிற்று. உள்ளே புத்தியில் வெறுமை படர்ந்தது.
மனசு மறுபடி இருட்டாயிற்று. தன்னுடம்பு மறந்து திசை தெரியாது போயிற்று. எல்லா சப்தமும் அந்நியமாய், தனக்கு சம்பந்தமற்றதாய், தன்னோடு சேராததாய் தோன்றியது.
தான் மட்டுமே இருப்பது புரிந்தது. அது உடம்பல்ல. புத்தியல்ல. மனசல்ல. புத்தியின் தந்திரமல்ல. மனசின் ஆர்வமல்ல. கணக்கு போடுகிற வேதனையில்லை. உணர்ச்சியின் ஆட்டமில்லை.
உள்ளே ஏதோ லேசாயிற்று. அதுதான் 'நான்' என்று புரிந்தது. வயல்வெளி தாண்டினார். எத்தனை நேரம், எந்த வழி என்கிற பிரக்ஞையில்லாது போனார்.
(இந்தப் பதிவினை வாசித்த பிறகு ஏற்படும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் முழுவதும் உரித்தானவர் இதை எழுத்தாக்கி படைப்பித்த ஆசிரியர் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களே.)
நன்றி.
குருவே துணை.
Share:

6 comments:

  1. 3 வருடங்களாகிறது இந்த இடுகைக்கு!! ஆயினும் இன்னும் ஒரு பின்னூட்டமும் இல்லை என்பது வேதனையளிக்கிறது.
    "கல்லை (கல் வடிவில் உள்ள பெண்ணை) வணங்க முடிகிறது! ஏன் பெண்ணை வணங்க முடியவில்லை!", எழுத்துச் சித்தரால் மட்டுமே (சிந்தனையை தோற்றுவிக்க) எழுத முடிந்த விஷயம். ஒன்று கண்கூடு!! இன்று சைவ வழிபாட்டை விட சாக்த வழிபாடே பெருகி வருகிறது எனும் யதார்த்த உண்மை.
    எனினும் சைவ (சிவ) வழிபாடு சாக்தத்திற்கு மூத்தது என்பது பொய்யுரையா?

    ReplyDelete
  2. அப்பப்பா புல்லரிக்கிறது.
    படித்தது என்றாலும் .இப்போது மீண்டும் படிக்க பல எண்ணங்கள்.
    பெண்களை மதிக்க வேண்டாம் .பேச்சால் செயலால் .நடத்தையால் இழிவு படுத்தாமல் இருந்தாலே போதும்.
    அன்பைக் காட்டினால் நாய்க்குட்டியாகி விடுவோம்.அதை கட்டிபோட்டு காயப்படுத்த வேண்டாம்.
    பாலகுமாரன் ஒரு கலங்கரை விளக்கம்.
    வாழ்வின் வழிகாட்டி
    அவர் காலத்தில் நானும் ஒருத்தி இருக்கிறேன் என்பதே மிகப் பெருமை எனக்கு

    ReplyDelete
  3. I'm looking for the digital version of the THIRUPPONTHURITHI novel, which i read in 1996, when i was in 10th vacation.
    It has shown a different meaning to my life.

    kindly share if anyone has it.

    ReplyDelete
  4. பெண் மனம் ஒன்று புரிய வைத்த
    எழுத்து சித்தர் நன்றி ஐயா.

    ReplyDelete

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com