Writer Balakumaran புருஷ விரதம் Free Book Download

"எழுத்துச் சித்தர், ஞானி, மஹான் பாலகுமாரன்” அவர்களால் 1992-ம் வருடம் எழுதி வெளிடப்பட்ட "புருஷ விரதம்" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை. ( பக்கம் 160 – 163)
"ப்ரம்ம ஸ்ரீ சதாசிவம் ஒரு மஹான். மிகப்பெரிய உபாசகர். தீவிர சாதகர். உன் தந்தையால் பயனடைந்தவர்கள் பல பேர். பொருளுணர்ந்து, காலம் உணர்ந்து ஜபிக்கக் கூடியவர். மிகப் பெரிய வித்தை அவரிடம் இருந்தது.
உனக்கு ஏன் எந்த வித்தையும் அவர் சொல்லாமல் போனார் என்று தெரியவில்லை. உனக்கு ஏதும் காரணம் தெரியுமா?"
"நான் ஒருமுறை கேட்டிருக்கிறேன் ஐயா"
"என்ன சொன்னார்?"
"எனக்கு நீ பிள்ளையாய் இருப்பது மட்டுமே உனக்கு கற்கும் யோக்கியதையைக் கொடுத்துவிடாது. இது பரம்பரை வித்தை என்னும் அனுமானம் தவறு. அவரவர் உழைப்புப்படி அமைய வேண்டிய பலம் இது.
படிப்பு மட்டும் ஏக்கப்பட்டவனுக்கே கிடைக்கும் என்று சொன்னார்."
"நீ ஏக்கப்படவில்லையா?"
"அப்பா இருந்தவரை படவில்லை. அவர் இறந்தபிறகு ஏக்கம் அதிகமாகிவிட்டது. என்னைப் புறக்கணித்துப் போய்விட்டார் என்பதுபோல் உணர்ந்தேன்."
"பிறகு?"
"வீட்டில் இது சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்பாவிடம் நல்ல புத்தகங்கள் இருந்தன. இம்மாதிரி புத்தகங்கள் படிப்பதற்காகவே நான் நூலக வேலையில் சேர்ந்தேன்.
குறிப்பாய் இவ்விதப் புத்தகங்கள் இருக்கும் பகுதிக்கு விருப்பப்பட்டு மாறினேன். அநேகமாய் நூலகத்தில் உள்ள இது பற்றிய எல்லா புத்தகங்களும் நான் படித்தாயிற்று."
"என்ன தெரிந்தது?"
"இது கடல், நீந்திக் கரை சேர முடியாது. படகில்லாமல் கடக்க முடியாது."
"எது படகு?"
"வழிகாட்டி."
"வேறென்ன தேவை?"
"துடுப்பு."
"எது துடுப்பு?"
"என் உற்சாகம், ஆர்வம்."
"என் பெயர் தெரியுமா உனக்கு?"
"தெரியும். நூலக விண்ணப்ப படிவத்தில் பார்த்தேன்."
"சொல்."
"சுகவனம் மாத்ருபூதம்."
"இல்லை. அது என் தமையன். என் பெயர் சைலேந்திரன்."
அர்த்தநாரி திடுக்கிட்டு நிமிர்ந்தான்.
"எங்கோ கேட்டது போல் தெரிகிறதா உனக்கு?" அவர் ஆழ ஊடுருவியபடி அவனைப் பார்த்துக் கேட்டார்.
ஆமென்று தலையசைத்தான்.
"உங்களைப் பற்றி நூலகத்திற்கு வந்தவர் பேசியிருக்கிறார். அவர் வயதானவர். இந்த விஷயங்களில் ஆர்வமுள்ளவர். ஆனால், அவரது கடைசி நேரத்தில் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை."
"உண்மை ஆனாலும், அவரது மரண நேரத்தில் நான் அவரோடு இருந்தேன். அவரும் ஒரு அற்புதமான சாதகர். உன்னைப் பற்றி எனக்குச் சொன்னது அவர்தான்.
சரி... புத்தகப் படிப்பால் மட்டுமே இது வந்துவிடாது. புத்தகப் படிப்பு இடைஞ்சலும் கூட. மேலும், உனக்குள்ளே இதை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற கேள்விக்கு நீ பதில் சொல்லியாக வேண்டும்.
இதைத் தெரிந்து கொள்ள உனக்கு காரணம் உண்டா?"
"எனக்கு ஒரு காரணம் தெளிவாகத் தெரிகிறது. இந்த தேசத்தின் மறைபொருளான விஷயம் அது. இது மறைந்து போய்விடக் கூடாது என்கிற அக்கறை உண்டு."
"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். இது மறையாது. கற்போர் எண்ணிக்கை குறைந்து போனாலும் காணாது போகாது. வேறு காரணம் சொல்."
"பிறருக்கு உதவி செய்யலாம். தீர்க்க முடியாதது என்று விஞ்ஞானம் கைவிட்டதை நாம் தீர்க்க முயற்சிக்கலாம்."
அவர் சிரித்தார். "தீர்க்க அரிதான விஷயம் ஒன்றே ஒன்று. அதைத் தீர்த்தவர்கள் இங்கு உண்டு. உடம்பை உகுத்துப் போகாமல் காற்றில் கரைந்து போனவர்கள் உண்டு. கரைக்காது இன்னும் ஒரு உடம்போடேயே இன்னும் வாழ்கிறவர்கள் உண்டு.
உதவி என்பதைக் கேட்டவருக்குச் செய்யலாமேயொழிய, நாமே வலிந்து நம்மை முன்னிறுத்திக் கொள்ளக்கூடாது."
"புரிகிறது."
"என்ன புரிகிறது?"
"இன்று காலை அத்தனை பேருக்கு நடுவே நான் 'மஹாதேவ சூத்திரம்' சொல்லியது தவறு. நூலகத்தில் அது பெரிய பேச்சாகிவிட்டது. ஆனால், வலியில் துடிக்கிறவர்களைப் பார்த்து உருகிச் செய்த செயல் அது.
அவள் ஒரு நல்ல பெண்மணி. புத்தகங்களை நேசிக்கிற லைப்ரரியன். அவளின் முக்கியம் உணர்ந்து அவளைச் சுகப்படுத்தினேன்."
"புரிகிறது. பிரயோகம் யாருக்குச் செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நன்றியோ, நெகிழ்வோ, காசோ இதர லாபமோ அல்லது கோபமோ, வஞ்சனையோ காரணமாய் இருத்தல் கூடாது.
வேதனைப்பட்டவரை, ஊன்றி கவனிக்கச் செய்யலாம் என்பதாய் மனதுக்குள் ஒரு கட்டளை வரும். அப்போது மந்திரப் பிரயோகம் செய்வது நல்லது. இது நம்மை மீறி, நம்மை இயக்குகிறவர்களின் கட்டளைகள்.
மனித சக்தி மிகவும் பலம் பொருந்தியதுதான். ஆனால், பலத்தின் மீது கர்வம் வந்துவிட, காரியத்தின் நோக்கம் புரியாது போய்விடும். வெளிப்பார்வைக்கு அடக்கமாய் இருப்பதைவிட உள்ளே நமக்கு நாமே கர்வப்படாது இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அடுத்தவர் நம்மைப் பாராட்டுவதைவிட, நம்மை நாமே பாராட்டுவதில்தான் அதிகம் ஆனந்தம். அந்த ஆனந்தம்தான் அகங்காரம். மிக உன்னிப்பாய் இதைக் கவனித்தால் தெரியும்.
(இந்தப் பதிவினை வாசித்த பிறகு ஏற்படும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் முழுவதும் உரித்தானவர் இதை எழுத்தாக்கி படைப்பித்த ஆசிரியர் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களே.)
நன்றி.
குருவே துணை.
Share:

1 comment:

  1. I am searching this book from long time, if possible please share pdf of this book, or let me know where I can buy this book. Thanks

    ReplyDelete

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com