Best Words and Reviews by Writer Balakumaran Fan - 1

எழுத்துச் சித்தர், ஞானி, மஹான் பாலகுமாரன்” அவர்களால் 1995-ம் வருடம் எழுதி வெளியிடப்பட்ட "கடலோரக் குருவிகள்" என்ற அற்புதமான நாவலுக்கு திரைப்பட இயக்குனர் திரு. மாதேஷ் அவர்கள் எழுதிய கடிதம்.
மாதேஷ்,
16/7 ராஜமன்னார் தெரு,
சென்னை -17
14-6-95
இனிய பாலா சார்,
நான் பிளஸ் டூ முடித்த நேரம், பாலாவின் புத்தகங்கள் படித்து விட்டு மலைத்துப் போயிருந்த காலம். பத்து பக்கத்திற்குப் பரவசமாய் ஒரு கடிதம் உங்களின் லாயிட்ஸ் ரோட் விலாசத்திற்கு எழுதி,
ஒவ்வொரு முறையும் கடிதத்தை எடுத்துக்கொண்டு Post office வரை சென்று... உள்ளுக்குள்ளே கேள்வியோடு முன்னும் பின்னும் அலைந்து... தகுதி இருக்கிறதா உனக்கு பாலாவை விமர்சனம் செய்யும் அளவுக்கு...
நகம் கடித்து... கடைசி வரை போஸ்ட் செய்யாமலேயே அந்தக் கடிதத்தைப் பத்திரப்படுத்தி கடவுளே... கடவுளே... பதினான்கு வருடங்கள் கழித்து நீங்கள் நன்கு அறிமுகமாகி ஒரு வருடத்திற்குப் பிறகு அந்தக் கடிதத்தை உங்களிடம் கொடுத்தேன்.
காகிதம் மக்கி பூச்சி அரித்து சின்னச் சின்ன ஓட்டைகளோடு இருந்த அந்தக் கடிதம் காண்பித்தபோது உங்களைவிட மிகவும் நெகிழ்ந்து போனது நான்தான்.
இப்போது இரண்டாவது கடிதம். இது எழுதும்போது பரவசப்படுகிறேன். இன்னும் கற்றுக் கொடுக்கிறீர்கள். சொல்லிக் கொடுப்பது கடினம். இதைச் சுலபமாக்கியது பாலகுமாரன் என்கிற மனிதன்.
இதைவிட சுலபமா வாழ்க்கையை வேறு யாரும் சொல்லிக் கொடுக்க முடியும்னு தோணவேயில்லை. ஒரு இளைஞர் பட்டாளமே, சமூகத்தின் ஒரு பகுதியே உங்களால் மாற்றப்பட்டிருக்கிறது.
மாற்றப்பட்டிருக்கும் பகுதி மீதி சமூகத்தை மாற்றும். இதற்கு உதாரணமா என்னை எடுத்துக்கலாம். நான் சாதாரண மனுஷன். எனக்கு அன்பு செய்யச் சொல்லிக் கொடுத்ததே உங்களுடைய புத்தகங்கள்தான்.
டீன் ஏஜ்ல யாரையும் மதிக்காம யாராலும் மதிக்கப்படாம இருந்த கால கட்டங்களில் உங்க புத்தகம் என்னை மதிச்சுது. தம்பி இதுதான், இத இப்படி யோசனை செய்யின்னு என் கூட பேசிச்சு.
நான் பாலாவோட புஸ்தகங்களைப் படிச்சுருக்கேன்ன உடனே இரண்டு நாலு ஆறுன்னு சினேகிதர்கள் சேர்ந்தாங்க. பேசினாங்க. பேசினோம்.
உங்களின் உந்துதலால் எங்களைப்பற்றி, எங்கள் வாழ்க்கைபற்றி மிகச் சுவையான காலகட்டத்தில் நாங்கள் யோசிக்கத் துவங்கினோம்.
இன்று பிரச்னைகளைச் சந்தித்து முன்னேறும் ஆளாய் நான் மாற நீங்க போட்ட அடித்தளம் காரணம். Life is war என்று எதிலோ எப்போதோ நீங்கள் எழுதியிருந்தது இப்போதும் எனக்கு உதவுகிறது.
இது முதல்லே சொன்னது பாலாதானா. எனக்குச் சொன்னது பாலாதான். வாழ்க்கை என்பது யுத்தம் மட்டுமல்ல, யுத்தம் என்பது அவமானம்னு சொல்லிக் கொடுத்தீங்க.
"டேய் இந்தச் செருப்ப ஈரத்தோட தொடதே... இதன் விலை 250 ரூபா." மீனாட்சி கத்த மாதவன் அதிர்ந்து போனான்.
250 ரூபாயா. இது என் ஒரு மாத ரேஷன் அரிசி.
ஆமாம்.. அவளது செருப்பு உனக்கு அரிசி. இப்ப நீ 250 ரூபா செருப்பு போடணும்னா என்ன செய்யணும்.
கேள்வியும் பதிலும் இந்த நாவல்ல இருக்கு.
எல்லா நாவல்களிலும் பாலா சார் நீங்கள் சிந்திக்கத் தூண்டுகிறீர்கள். படிச்சுட்டு வெறுமே கீழ போட முடியாது. உங்கள் நாவல் தொந்தரவு பண்ணும்.
என்னை மேற்கொண்டு யோசிக்க வைக்கும். இந்த நாவலைப் படிச்ச பிறகும் யோசிக்காதவனை யாரும் காப்பாற்ற முடியாது.
நீங்கள் வாழ்கிற காலகட்டத்தில் நான் வாழ்ந்தேன் என்கிற பெருமை மட்டுமல்ல, உங்களோடு பேசிச் சிரித்து வியந்து பழகினேன் என்கிற பெருமையும் எனக்கு உண்டு.
என் பேரர்களுடன் நான் உங்களைப் பற்றிச் சொல்லுவேன். என்னைப் பற்றி என் பேரன்கள் பேசும்போது எங்க தாத்தாவுக்கு அதாவது எனக்கு, உங்களை ரொம்ப நல்லா தெரியுமாம் என்று பேசுவார்கள். நாம் எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படங்களை ஆவலாய்ப் பார்ப்பார்கள்.
பதினாறு வருடங்கள் முன்பு கடிதம் எழுதி போஸ்ட் பண்ணாத, நேரே உங்களைப் பார்க்கும் போது இது ரொம்ப நாள் முன்பு உங்களுக்கு எழுதின கடிதம்னு கொடுத்தது, அதை நீங்க படிக்கிறது பார்த்து நெகிழ்ந்தது மாதிரி அப்பவும் நான் மனம் நெகிழ்ந்து போவேன்.
என் பேரப் பிள்ளைகளுக்கும், பேத்திகளுக்கும் உங்களைப் பற்றி சொல்லுவேன்.
நீங்க ஒரு லெஜன்ட் பாலா. சந்தோஷமான சரித்திரம். உங்களோட ஒரே தட்டில சாப்பிட்டதும், ஒரே ரூம்ல தங்கினதும் எனது சரித்திரம்.
உங்க புகழும், கொஞ்சம்கூட பந்தா பண்ணாத சாதாரணமா எங்க பக்கத்துல உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கிறதும் ஆச்சர்யம்.
உங்க எழுத்து நிஜம்கறதுக்கு நீங்கதான் சாட்சி. உங்க வாழ்க்கை சாட்சி. உங்கள் நலத்துக்காய் நான் மனமுருக பிரார்த்திக்கிறேன்.
பணிவன்புடன்
மாதேஷ்.

Share:

0 comments:

Post a Comment

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com