writer balakumaran novels and books: manal nadhi


"எழுத்துச் சித்தர், ஞானி, மஹான் பாலகுமாரன்” அவர்களால் 1994-ம் வருடம் எழுதி வெளிடப்பட்ட "மணல் நதி" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை. ( பக்கம் 88 - 91)
"உரிமை அதிகம் வர கசப்பு வருகிறது, கசப்பு உரிமையை எதிர்த்து சண்டை தருகிறது."
"அப்ப எப்படி வாழறது?"
"உரிமை மீறாமலும், உரிமை இல்லை என்று போகாமலும்."
"புரியலையே..."
"ஆசையை தீர்க்காமலும், அது இல்லை என்று வன்முறையுடன் அப்புறப்படுத்தாமலும்."
"எப்படி?"
"ஆசையை உற்றுப் பார்த்தல். உரிமை தரப்பட்டாலும் இது எதற்கு என்று உரிமையை உற்றுப் பார்த்தல்... ஆசை அல்லது உரிமை தோன்றும்போதே தெளிவோடு இருத்தல் இருக்க, அத்துமீற மாட்டோம்."
"இந்த உத்துப் பார்க்கறதுன்னா என்ன? எப்படி பார்க்கறது?"
"மௌனமாய் இருக்கும்போது முடியும்."
"வாய் பேசாதயா?"
"வாய் மட்டுமல்ல, புத்தியும் பேசக்கூடாது."
"இது எப்படி?"
"தியானம்."
"தியானம்னா..."
"மனம், மனசைப் பார்த்துக் கொண்டேயிருப்பது. அப்படி பார்க்கப் பார்க்க மனம் சுருங்கும். எண்ணம் மறையும். எண்ணமே இல்லாத விநாடி மனசே இல்லாத நேரம் வரும்?"
"மனசு அலையுதே..."
"மூச்சு ஒழுங்குபடுத்த மனம் அலையல் குறையும்."
"எப்படி?"
"மனசுக்கும் மூச்சுக்கும் சம்பந்தம் உண்டு. மனம் அசைய மூச்சு. மூச்சு பறக்க மனம் அசையும். கோபத்தில், காமத்தில் மூச்சு மாறும். மூச்சு தாளம் பிறழ கோபம், காமம் அதிகமாகும்."
"அடேயப்பா. உங்களுக்கு தியானம் தெரியுமா?"
சீனுவாசன் மௌனமாய் இருந்தான்.
எனக்கு கத்துக் கொடுங்களேன்."
சரி."
"எல்லார்க்கும் தியானம் வருமா?"
"எவருக்கும் வரும்... எவரிலும் இந்தத் திறன் உண்டு. கத்துக்கறதில் இல்லை. இடைவிடாது பயிற்சி செய்யறதுல இருக்கு."
நாடி சுத்தி என்கிற மூச்சுப் பயிற்சி, உட்காரும் விதம், மனசு தேடும் சொல், அதில் வரும் சிரமம், விடாது மனம் தேடி பின்னால் போகும் முறை, ஆரம்ப சிரமம், திகைப்பு, வலி, மயக்கம் எல்லாம் சொன்னான்.
"இருவது நிமிஷம் அப்படியே இருங்க. உங்களுக்குள்ளேயே இருங்க. பழகப் பழக சுலபமாயிடும். இருக்கறது சந்தோஷமாயிடும்."
அவர்கள் கண்மூடி அசையாது உட்கார்ந்திருந்தார்கள்.
சீனுவாசன் நோட் புக்கிலிருந்து பேப்பர் கிழித்து எழுதினான்.
நண்பர்களுக்கு.
சிரத்தையுடன் எது செய்தாலும் சிரார்த்தம்.மூத்தோருக்கு செய்யும் நன்றி. நான் சிரார்த்தம் செய்யவில்லை. மாறாய் நம் மூத்தோர்கள் நமக்குத் தந்த ஒரு பயிற்சியை சிரத்தையுடன் உங்களுக்குத் தந்து விட்டேன்.
இது இறையருள். புத்தன் கருணை. என் காசி, கயா, அலஹாபாத் யாத்திரை பூர்த்தியாயிற்று. என் முன்னோர்கள் சொர்க்கம் போனார்கள். இனி எனக்காய் போகவேண்டும்.
நான் ஹரித்வார், ரிஷிகேசம் போகிறேன். சில நாட்கள் அங்கு தனிமையில் இருப்பேன். உள்ளே மனசு உட்கார்ந்து விட்டால் போதும். உட்கார்ந்த இடமே காசி, கயா.
மனசு செயலை விட்டால் போதும், விட்ட இடமே வைகுந்தம். மனம் உற்றுப் பார்க்க மனம் சுடுவது தெரியும். நம் தஹிப்பு புரியும். சட்டி சுட்டது. கை விட்டது.
இது பூடகமே இல்லை. நான் தித்திப்பு என்பதை நீங்கள் தின்றாலொழிய தெரியாது. தெரிந்த பிறகு கேள்வி வராது. நான் வருகிறேன். நீங்கள் செய்த உதவிகள் அனைத்தும் நெஞ்சில் இருக்கும்.
மணலை நதியென்று பார்த்தோம். திகைத்தோம். அது நதியா? மணலா? இரண்டும்தான். நதியெனில் நதி. மணலெனில் மணல்.
வாழ்கையும் அப்படித்தான். துக்கமெனில் துக்கம். சந்தோஷமெனில் சந்தோஷம். நாம் கூட்டமா, தனியா? நம்மிடையே கேள்வி வந்தது. நாம் கூட்டம்தான்.
ஆனால், கூட்டத்திலும் தனிதான் மணல். அது நதியாய் வெறும் கூட்டமாய் பரவிக் கிடக்கிறது. நீரில் குளிர்ந்தும் புரண்டும், வெப்பக் காற்றில் ஆவித்தும் அலைக்கழிந்தும் இடம் மாறுகிறது.
வாழ்க்கை ஒரு மணல் நதி. யோசிக்க உங்களுக்கும் இது புரியும். உலகம் சிறியது. எங்கேனும் சந்திப்போம்.
என்றென்றும் அன்புடன்,
சீனுவாசன்.
(இந்தப் பதிவினை வாசித்த பிறகு ஏற்படும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் முழுவதும் உரித்தானவர் இதை எழுத்தாக்கி படைப்பித்த ஆசிரியர் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களே.)
நன்றி.
குருவே துணை.
Share:

0 comments:

Post a Comment

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com