கனவுகள் விற்பவன் Writer Balakumaran Novel Free Download kanavugal virpavan


"எழுத்துச் சித்தர், ஞானி, மஹான் பாலகுமாரன்” அவர்களால் 1990-ம் வருடம் எழுதி வெளிடப்பட்ட "கனவுகள் விற்பவன்" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை. ( பக்கம் 173 – 178)
மெல்ல தனக்குள்ள நடந்தது என்ன என்று யோசித்தார்.
"அவனுக்கு சொல்லிக்கொடு. அவனை மெல்ல மேலேற்று நீ போ."
"என்ன தெரியும் எனக்கு... எதைச் சொல்லித் தருவது.... உனக்குத் தெரிந்தது என்பதில்.... ஏதோ தொக்கி நிற்கிறதே. எனக்குத் தெரிந்தது எது?
கால்கள் சம்மணமிட்டு ஆழமாய் மூச்சு வாங்கி இழுத்து மனதை ஒருநிலைப்படுத்தி யோசிக்க முயன்றார்.
முதுகு நிமிர, தலை மெல்ல மேலும் கீழும் பக்கவாட்டில் அசைந்தது. முதுகுத் தண்டில் நேர்க்கோடு ஓடி நின்றது. பிருஷ்டத்தில் தரை அழுந்தாமல் சரிவாக சற்று நெளிந்து உட்கார, ஆசனம் நேராயிற்று. குழப்பம் விலகினாற்போல இருந்தது.
கல் கொண்டு வந்து நட்டோம்.கல் பெண்ணாய் இருந்தது. பெண்குழந்தை போலிருந்தது. அப்படியானால் இது சக்தி கோவிலா... சாக்த வழிபாடா... சாக்த வழிபாடு எப்படி என்ன விதம்? வெறுமே போற்றி சொல்லிக் கொடுத்தால் போதுமா?
மூக்கும், கண்ணும், காதும் வெளியில் கவசமாய் செய்து போட்டு, மேலே ஒரு ஓலைக்கூரை எழுப்பி அம்மன் கோவில் என்று பெயரிட்டு, முன்னே சூலம் நிறுத்தி எலுமிச்சை குத்தி பலிபீடம் வைத்து,
அன்னம் நிவேதனம் செய்து... இந்த ஊர்ல இப்படி ஒரு கோவில் இருக்கே... அப்புறம் இது எதற்கு?
எது சக்தி வழிபாடு? எது சாக்தம்? பெண்ணை வழிபடுதல்... பெண் என்கிற அம்சத்தை வழிபடுதல்... பெண்ணை பூஜித்தல் ஏன்? எதற்கு? மூளை வறண்டு வெளியாய் இருந்தது. யோசிக்க முடியவில்லை.
போவோம். இப்படி நடந்து போவோம். இப்போது செய்ததுபோல தனக்குள்ளேயே வரும் யோசனைகளை அடுக்கிக்கொண்டு போவோம். இது தனி யோசனையா அல்லது வேறு எவராவது யோசிக்கிறார்களா...
"சரி எல்லா யோசனைகளும் வரட்டும்... எல்லா எண்ணங்களும் வரட்டும். வரும் எண்ணங்களை அப்படியே பார்க்கலாம். ஏன் இந்த யோசனை வருகிறது என்று தடுக்காமல் பார்ப்போம்… பேசாது பார்த்திருப்போம்."
"ஏன் சக்தி வழிபாடு?"
"ஏன் பெண் பூஜை… எதனால்?"
பெண் பிரியமுள்ள வஸ்து... யாருக்கு? ஆணுக்கு. இது நிஜமா… ஆம் இது நிஜம். ஏன் பெண்ணைப் பிடிக்கிறது? ஆணுக்குக் காமம். காமம்தானா… கலவிக்குத்தான் பெண்ணா?
இல்லை ஒரு பாதுகாப்பு... யாருக்கு? ஆணுக்கு? ஆண் அல்லவா பெண்ணுக்கு பாதுகாப்பு. அது வெளியே. வெளி உலகத்தில். உள்ளே உள் மனசில் பெண் ஆளுமைதான் அவனை அமைதியாக்குகிறது. நிஜமா இது?
நிஜம் சரஸ்வதி மாதிரி நிஜம். அவள் இல்லாது போயிருந்தால் திருட்டு கேஸ் நடந்தபோது உடைந்து போயிருப்பேன். அவள் கொடுத்த உற்சாகத்தில் வெளியே வந்ததுதான்.
ஏதோ ஒரு கடைக்கு காவலானேன்... காவல் காத்த கடையை வாங்கினேன். சரஸ்வதி பாரத்தை எளிதாக்கினாள். எனக்காக ஆலோசனை செய்தாள்... இப்பவும் செய்கிறாள்.
நான் சரஸ்வதிக்கு பாதுகாப்பா... சரஸ்வதி எனக்குப் பாதுகாப்பு.
"கடைக்குப் போகணுமே, மணி ஆறாயிடுத்து. மெல்ல எழுந்திருங்கோ." சரஸ்வதி மெல்ல எழுப்ப, உலகம் இனிமையாய் தோன்றுகிறது.
சரஸ்வதியோடு சண்டை போடுகிறேனே... ஏன்? அது அகங்காரம் 'எல்லாம் எனக்குத் தெரியும், சும்மா கிட, என்கிற ஆணவம்.
சரஸ்வதி சும்மா இருந்து விடுகிறாள்.
பிறகு..
சரஸ்வதி மறுபடி பேசுகிறாள். மறுபடி கஷ்டப்படுகிறபோது அவள் மறுபடி பேசுகிறாள்... அப்போது புரிகிறது.
ஆக கத்தியது?
வீண், பொய், ஆடம்பரம், திமிர், ஆணாதிக்கம்...
பெண்ணுக்குப் பின்னால் போவது பேதைமை இல்லையா? பெண் மாயப் பிசாசு இல்லையா?
ஆமாம். மாயப் பிசாசு. மதிக்காதபோது பிசாசாகிறாள். மறுக்கிறபோது கோபம் காட்டுகிறாள். மறுக்காமல் மதிக்கிறபோது, பெண் பெண்ணாய் இருக்கிறாள்.
பெண், ஆணை ஏமாற்றுவதே இல்லையா? இல்லை. ஆண் ஏமாற்றுவான் என்கிற பயத்தில் பெண் ஏமாற்றுகிறாள்.
பயம் அகற்ற, பாசம் பொழிகிறாள்.
பெண் பயம் எது? ஐயர் வயல்களூடே அந்த மேடு நோக்கிப் போனார். யோசிப்பு அயர்ச்சி கொடுத்தது.
பெண்ணின் பயம் எது? கல்லை நோக்கி கேள்வி கேட்டார். காற்று சீறியடித்தது.
பெண் பயம் கொள்வது அவமானத்திற்கு. நாலு பேர் முன்பு தலைகுனிவு ஏற்படுவதற்கு. பிறர் தூஷணையாய் பேசிவிடுவார்களோ என்பதற்கு. தன் பலஹீனத்தைத் தூக்கித் தன்னைத் தலைகுனியச் செய்கிறார்களே என்பதற்கு.
தன்னை யாரும் தாழ்ச்சியாய் நினைத்துவிடக்கூடாது என்பதற்குப் பெண் பயப்படுகிறாள். 'கற்பு என்பது அழிக்கப்படுகிறபோது எதிர்க்க முடியவில்லையே' என்று பயப்படுகிறாள்.
எல்லாரும் அதை விளம்பரப் படுத்துவார்களே என்று பயப்படுகிறாள். சீறுதல் விட்டு சுருங்கி, சுருண்டு போகிறாள். மதிக்கிறவனுக்கு அதே கற்பைத் திருட்டுத்தனமாய் கூட விட்டுக் கொடுக்கத் தயாராய் இருக்கிறாள்.
பெண் சமூகப் பிராணி. ஆணைவிட அதிக சமூக ஒட்டுதல் உள்ள ஜீவன். ஓடிப் போய் பஸ்ஸில் அவளாலும் ஏற முடியும். "விழுந்து விட்டால்' என்கிறபயம் உடனே வருகிறது.
'நாலு பேர் சிரிப்பார்களே' என்கிற கவலையே அதைச் செய்யாது 'அடுத்த பஸ் வரட்டும்' என்று காத்திருக்க வைக்கிறது. 'சீக்கிரம் வரணுமே’ என்ற வேண்டுதலைத் தருகிறது.
புருஷ உறவும் இப்படித்தான். ஒருவனைப் பிடித்திருக்கிறது என்று அவளால் அழகாய் வெளிப்படுத்த முடியும். ஏற்க மறுத்தால்... மாட்டேனென்று போய்விட்டால்.. 'சீ உன்னை யார் லவ் பண்ணுவா' என்று அவன் புறக்கணித்துவிட்டால்....
ஊரில் எல்லோரிடமும் போய் அலையுது என்று பேசி விட்டால். அந்த பஸ் வரட்டும், வேறு புருஷன் வரட்டும். வரணுமே பகவானே' வேண்டுதல் வந்து விடுகிறது.
அவமானம்தான் பயம். கேலியும் ஏச்சும்தான் பயம்.
பயப்படாதே என்பதே சக்தி பூஜை. சாக்த வழிபாடு. உன்னை உனக்குத் தெரியாது தாயே. உன்னால் உருவு அடைந்தவன் நான். உன்னுள் வளர்ந்தவன் நான்.
உன் நெஞ்சில் உணவு உண்டு, உன் மடியில் தினம் தூங்கி, உன் சூட்டில் சுகப்பட்டு, உன்னால் உரம் பெற்றவன் நான். எனது எல்லா வலிமையும் வெற்றியும் உன்னால் உண்டானவை, நீ கொடுத்தவை.
உன்னை அவமானப்படுத்த நான் யார்? நீ உணவு இல்லை என்று ஒதுக்கியிருப்பின் நான் எப்படி வெற்றியடைந்திருக்க முடியும்... உன்னால் பிச்சையிடப்பட்டவன், உன்னை அவமானப்படுத்த முடியுமோ?
உன்னிடம் இருந்து வாழ்ந்தவன், உன்னை இகழ்ச்சியாகப் பேசுவேனோ.. இல்லை அம்மா... நான் உன்னுடையவன். உன்னைப் போற்றுபவன். உன் உதவி மறக்காதவன்.
என்னிடம் பயமெதற்கு அம்மா. எல்லா பெண்ணும் அம்மாதான். எல்லா பெண்ணும் எனக்கு தாய் ரூபம்தான். எல்லா பெண்ணும் ஆணுக்கு உதவிதான்.
தன் பழைய நிலை அறிந்தவன், தான் வளர்ந்த விதம் அறிந்தவன், தன் வெற்றிக்குக் காரணம் எது, எவர் என்று யோசித்தவன் சாக்தனாகிறான். சக்தி வழிபாடு செய்கிறான்.
நான் வெறும் கல். என்னை வெளியே எறிந்தது நீ. எறிந்ததால் உண்டானது சக்தி. வெறும் கல் தாக்குமா? எறிந்தபோதுதானே தாக்கும். தாக்கி உடைக்கும். தாக்குகிற கல்லுக்குத்தானே மதிப்பு. தரையில் இருக்கிற கல் எதற்கு உபயோகம்?
நான் வெறும் கத்தி. வீசப்பட்ட கத்திதானே வீரம். உறையிலிருப்பதில் என்ன லாபம்? கத்தி சிவம். வீச்சு சக்தி. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சக்தி இல்லாத சிவத்துக்கு மதிப்பில்லை.
அது உயிர்ப்பில்லை. அங்கு விளைதல் இல்லை. அங்கு தொழில் இல்லை. சிவம் ஜடம். அதாவது கத்தி சிவம். வீச்சு சக்தி. சண்டை சக்தி ரூபம்.
ஆண் சிவம். பெண் சக்தி. பெண் இல்லையேல் ஆண் இல்லை. வெறும் சக்தி விளைவு தருவதில்லை. சிவத்தை இயக்கிய சக்தி விளைவாகிறது.
பாலு ஐயருக்கு மெல்ல உள்ளே சூரியன் உதயமாயிற்று.
(இந்தப் பதிவினை வாசித்த பிறகு ஏற்படும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் முழுவதும் உரித்தானவர் இதை எழுத்தாக்கி படைப்பித்த ஆசிரியர் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களே.)
நன்றி.
குருவே துணை.
Share:

0 comments:

Post a Comment

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com